ரஹானேவின் தலைமையில் ஆஸ்திரேலிய தொடரை இந்தியா வெல்ல வேண்டும் சோயப் அக்தர் விருப்பம்
ரஹானேவின் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி அப்போது இருந்த சூழ்நிலையில் அடுத்து வரும் போட்டிகளிலும் இதே நிலை தான் இருக்கும் என்று பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களும் கருதினர். ஆனால் மெல்பர்னில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் விஸ்வரூபத்தை பார்த்த அனைவரும் பெரும் ஆச்சரியப்பட்டனர். முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியாவை 2வது டெஸ்ட் போட்டியில் அதே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.
இந்தியாவின் இந்த அபார ஆட்டத்தை புகழாதவர்களே இல்லை என்று கூறலாம். இந்திய வீரர்களை பாகிஸ்தான் வீரர்கள் பாராட்டுவது மிகவும் அரிதாகும். இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் மெல்பர்னில் இந்திய ஆட்டத்தையும், இந்திய வீரர்களையும் வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார். இதுகுறித்து அத்தர் கூறியது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா அபார வெற்றி பெறும் என்று நான் டெல்லியில் உள்ள சில நண்பர்களிடம் கூறியிருந்தேன். இந்தியாவின் பேட்டிங், குறிப்பாக மத்திய நிலையில் ஆடும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினால், இந்த தொடரை இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று நான் அவர்களிடம் கூறினேன்.
ஆனால் அதை என்னுடைய நண்பர்கள் நம்பவிவில்லை. அது பேராசை என்று கூறினர். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் என்னுடைய நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் இந்திய வீரர்களின் ஆட்டம் இருந்தது. ஒரு நாள் காலையில் எழுந்து பார்த்தபோது இந்தியா 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. என்னால் முதலில் அதை நம்ப முடியவில்லை. இந்தியா 369 ரன்கள் எடுத்திருக்கலாமோ என்று கூட நான் நினைத்தேன். ஆனால் 2வது போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி போட்டியை வென்றது. சிக்கலான கட்டத்தில் தான் நம்முடைய உண்மையான குணமும், திறமையும் வெளிப்படும். அதேபோல் தான் இப்போது நடந்துள்ளது.
ரஹானே மிகவும் அமைதியான கேப்டனாக உள்ளார். மைதானத்தில் அலறி, கூக்குரலிட்டு அட்டகாசம் செய்யாமல் தன்னுடைய பொறுப்பை மிகவும் அமைதியாக செய்திருக்கிறார். அவருக்கு கீழ் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். அதற்காக இந்த வீரர்களையும், இந்திய அணி நிர்வாகத்தையும் நான் பாராட்டுகிறேன். அணியில் நிரந்தரமாக ஆடுபவர்வர்களை விட விளையாடுவதற்காக வெளியில் காத்துக் கொண்டிருப்பவர்கள் தான் சிறப்பாக ஆடுகின்றனர். அதை இந்தப் போட்டியிலும் நாம் பார்த்து விட்டோம். ரஹானேவின் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பமாகும். இவ்வாறு அவர் கூறினார்.