பொதுத் தேர்வு : குழப்பத்தில் கல்வித்துறை.. கலக்கத்தில் மாணவர்கள்

தமிழகத்தில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடக்குமா நடக்காதா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதால் 10,11மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும். விரைவில் தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். அதேசமயம் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த கல்வி ஆண்டு பூஜ்ய ஆண்டாக அறிவிக்கப்படலாம் எனவும் அதே அமைச்சர் அறிவித்திருக்கிறார். இது போன்ற அறிவிப்புகள் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தனியார் பள்ளிகள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி எட்டாக்கனியாகவே உள்ளது. ஆன்லைன் வகுப்புகளை எத்தனை மாணவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது உறுதியாகச் சொல்ல முடியாத நிலை . பள்ளிகள் திறக்கப்படாத குறிப்பாக அரசுப் பள்ளிகள் வகுப்பு விலை நடக்காத நிலையில் பொதுத் தேர்வை எப்படி மாணவர்கள் எதிர் கொள்வார்கள்? பாடங்கள் குறைக்கப்படும் என்று சொன்னாலும் , மாணவர்களின் செயல்பாடு வழக்கம்போல் இருக்க வாய்ப்பே இல்லை. கடந்த ஆண்டு ஜூன் முதல் பிப்ரவரி வரை பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இருப்பினும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பத்தாம் வகுப்புக்கு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பள்ளிகளை திறக்க வில்லை, பாடங்கள் நடத்த வில்லை ஆனால் பொதுத்தேர்வு மட்டும் கட்டாயம் நடத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்திருப்பது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. இது மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே முதல்வர் இதில் தலையிட்டு ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் என பல தரப்பினரையும் அழைத்துப் பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

More News >>