மோகன்லால், மீனா நடிப்பில் உருவான திரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் வெளியாகிறது.
மோகன்லால், மீனா நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கான டீசரை புத்தாண்டு இரவில் மோகன்லால் தன்னுடைய சமூக இணையதள பக்கத்தில் வெளியிட்டார். சமீப காலத்தில் மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் படங்களில் குறிப்பிடதக்கது மோகன்லால் நடிப்பில் உருவான திரிஷ்யம். ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் மோகன்லாலுடன் மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக் மற்றும் பலர் நடித்திருந்தனர். கடந்த 2013 இறுதியில் வெளியான இந்தப் படம் மலையாளத்தில் முதன்முதலாக 50 மற்றும்75 கோடி வசூலை தாண்டிய படம் என்ற சாதனையை படைத்தது. மேலும் இந்தப் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல், கௌதமி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது. அது மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் ஹிந்தி உட்பட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது.
இந்நிலையில் 7 வருடங்களுக்குப் பின்னர் இந்த படத்தின் 2வது பாகம் உருவாகியுள்ளது. பெரும்பாலும் முதல் பாகத்தில் நடித்த அதே நட்சத்திரங்கள் தான் 2வது பாகத்திலும் நடித்துள்ளனர். கொரோனா அச்சத்திற்கு இடையே தான் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் மோகன்லால், மீனா உட்பட நட்சத்திரங்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். ஒன்றரை மாதத்திற்கு உள்ளேயே படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டது. படமும் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. இந்தப் படம் தியேட்டரில் மட்டுமே வெளியாகும் என்று இதன் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தொடக்கத்தில் கூறினார். ஆனால் தற்போதைய சூழலில் கேரளாவில் தியேட்டர்கள் எதுவும் திறக்கப்பட வாய்ப்பில்லாததால் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமேசான் பிரைமில் இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த படத்தின் டீசர் புத்தாண்டு இரவில் வெளியிடப்பட்டது. நடிகர் மோகன்லால் தன்னுடைய சமூக இணையதள பக்கத்தில் டீசரை வெளியிட்டார். டீசர் வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் பார்த்து விட்டனர். இது மலையாளத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகும் 4வது முக்கிய படமாகும். முதலில் ஜெயசூர்யா நடித்த சூபியும் நானும் என்ற படம் அமேசான் பிரைமில் வெளியானது. மலையாள சினிமாவில் இதுதான் ஓடிடி தளத்தில் வெளியான முதல் படமாகும். இதன் பின்னர் பகத் பாசிலின் சீ யூ சூன், ஒரு ஹலால் லவ் ஸ்டோரி ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் மோகன்லாலின் திரிஷ்யம் 2 வும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.