கேரள சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 10ம் தேதி தொடங்குகிறது
கடந்த வருடம் டிசம்பரில் நடைபெற வேண்டிய கேரள சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 10ம் தேதி தொடங்குகிறது. வழக்கத்தை விட மாறாக இம்முறை கேரளாவில் 4 நகரங்களில் திரைப்பட விழா நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வருடந்தோறும் கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். இதற்கு அடுத்தபடியாக திருவனந்தபுரத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா குறிப்பிடத்தக்கதாகும். கோவாவில் வருடம் தோறும் நவம்பர் மாதத்தில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட விழா தள்ளிப் போனது.
இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற வேண்டிய 51வது சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் தனுஷ் நடித்த அசுரன் படம் திரையிடப்படுகிறது. வழக்கமாக திருவனந்தபுரத்தில் கேரள சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 3வது வாரத்தில் நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த திரைப்பட விழாவும் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் 25வது கேரள சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக திருவனந்தபுரத்தில் மட்டுமே இந்த திரைப்பட விழா நடைபெறும்.
ஆனால் இம்முறை வழக்கத்தை விட மாறாக திருவனந்தபுரம் தவிர எர்ணாகுளம், பாலக்காடு மற்றும் கண்ணூர் ஆகிய நகரங்களில் விழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு இடங்களிலும் 5 தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படும். திருவனந்தபுரத்தில் பிப்ரவரி 10 முதல் 14 ம் தேதி வரையும், எர்ணாகுளத்தில் 17 முதல் 21ம் தேதி வரையும், பாலக்காட்டில் 23 முதல் 27ம் தேதி வரையும், கண்ணூரில் மார்ச் 1 முதல் 5 வரையும் விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு தியேட்டரிலும் அதிகபட்சமாக 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வழக்கமாக இந்த விழாவுக்கு கட்டணமாக ஒருவருக்கு ₹ 2,000 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை கட்டணம் குறைக்கப்பட்டு 750 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.