இந்திய அணியில் இடம் பெற்றார் தமிழக வீரர் நடராஜன் 3வது டெஸ்டில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா?
2வது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் முகம்மது ஷமிக்கு பதிலாக ஷார்துல் தாகூருக்கும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. 3வது டெஸ்ட் போட்டியில் இவர்கள் இருவரில் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.ஒரு காலத்தில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடும் பஞ்சம் நிலவியது. அதுமட்டுமில்லாமல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை கண்டு எந்த அணியும் பயப்படுவதும் கிடையாது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எந்த பந்து வீச்சையும் சமாளிக்கக் கூடிய திறமை வாய்ந்த ஆஸ்திரேலிய வீரர்கள் கூட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடி வருகின்றனர். முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வேகப்பந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற்றிருந்த முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தற்போது காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த 2 போட்டிகளிலும் இவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இதேபோல முகமது ஷமிக்கு பதிலாக ஷார்துல் தாக்கூருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் 3வது டெஸ்ட் போட்டியில் இவர்களில் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடராஜன் ஆஸ்திரேலிய தொடருக்கான ரிசர்வ் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே ஒரு நாள் போட்டி தொடரில் நவ்தீப் செய்னிக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து 3வது ஒருநாள் போட்டியில் நடராஜனுக்கு இடம் கிடைத்தது. இதனால் ஒருநாள் போட்டியில் அவருக்கு அரங்கேறும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் டி20 போட்டியிலும் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது டெஸ்ட் அணியிலும் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. 3வது டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தால் டெஸ்ட் போட்டியில் அவரது அரங்கேற்ற போட்டியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் மூன்று அணியிலும் அரங்கேறிய வீரர் என்ற பெருமையும் நடராஜனுக்கு கிடைக்கும்.