நீரவ் மோடி வழக்கு : ஜனவரி 7ல் இறுதி கட்ட விசாரணை
பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் நீரவ் மோடி தொடர்பான வழக்கின், இறுதி விசாரணை வரும் ஜனவரி 7 ஆம் தேதி நடக்கவுள்ளது. குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றுவிட்டார். பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன் உத்தரவாத கடிதங்களை சில வங்கி ஊழியர்கள் உதவியுடன் மோசடியாக பெற்ற நிரவ் மோடி, 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை வெளிநாடுகளில் உள்ள வங்கி கிளைகளில் தனது நிறுவனத்திற்காக சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த மோசடி குறித்துகடந்த 2019 ஜனவரி மாதம் முதல் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. இதையறிந்த நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிரவ்மோடிக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதற்கு பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்த பின்னரே, லண்டனில் நிரவ்மோடி கைதானர்.
சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் பணமோசடி செய்ததாக இந்தியா கூறி வரும் நிலையில், அவரது ஜாமீன் மனுக்கள் பல முறை நிராகரிக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சிறையில் உள்ள நிரவ் மோடி, 28 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வரப்படும் நிலையில், இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் ஜனவரி 7 மற்றும் 8 ம் தேதிகளில் நடக்கிறது. இறுதி கட்ட விசாரணை என்பதால் இன்னும் சில வாரங்களில் தீர்ப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.