இந்தியாவின் பணக்கார கட்சி பாஜக - ரூ. 1,034 அளவிற்கு அள்ளிக் கொடுத்தது யார்?

கடந்த 2016-17ம் நிதியாண்டில் பாஜக, ரூ. 1,034 கோடி அளவிற்கு வருமானம் பார்த்துள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளுக்கு கிடைத்த ஒட்டுமொத்த நன்கொடை ரூ. 1,559 கோடிதான் எனும்போது, அதில்ரூ. 1,034 கோடி பாஜக-வுக்கு மட்டும் கிடைத்துள்ளது.

தேசிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள, வருமான வரி தாக்கலை ஆய்வு செய்து, தில்லியைச் சேர்ந்த ‘ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு’ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்தான் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கடந்த 2016-17ஆம் ஆண்டில் 7 தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. ஆயிரத்து 559 கோடியே 17 லட்சமாகும். இதில் காங்கிரஸ் கட்சியின் வருமானம் ரூ. 225 கோடியே 36 லட்சம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வருமானம் ரூ. 2 கோடியே 8 லட்சம்.

ஆனால், மத்தியில் ஆளும் பாஜக-வின் வருமானம் மட்டும் ரூ. ஆயிரத்து 34 கோடியே 27 லட்சம். அதாவது, 2016-17ஆம் ஆண்டுகளுக்கு இடையே பாஜகவின் வருமானம் 82 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு ரூ.570 கோடியாக இருந்த பாஜகவின் வருமானம், கடந்த 2016-ஆம் ஆண்டில் ரூ.1,034 கோடியாக உயர்ந்துள்ளது. பாஜக 2016-17ஆம் ஆண்டில் தங்களுக்கு கிடைத்த வருமானத்தில் 96.41 சதவிகிதம், அதாவது, ரூ. 997 கோடியே 12 லட்சம் நன்கொடை, மானியங்கள், தொண்டர்கள் பங்களிப்பு மூலம் கிடைத்தது எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் பணக்கார கட்சியான பாஜகவிற்கு ரூ. 1,034 அளவிற்கு அள்ளிக் கொடுத்தது யார்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>