கேரளாவில் 5ம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் திறப்பு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி
கேரளாவில் வரும் 5ம் தேதி முதல் அனைத்து சினிமா தியேட்டர்களும் திறக்கப்படுகின்றன. 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் இன்று கூறினார். கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. இந்நிலையில் நோய் பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்தியா முழுவதும் லாக் டவுன் நிபந்தனைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தன. இதன்படி நிபந்தனைகளுடன் சினிமா தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் கேரளாவில் தியேட்டர்களை திறக்க கேரள அரசு அனுமதிக்கவில்லை.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளாவில் சினிமா, டிவி படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகள் தொடங்கின. ஆனால் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாததால் தியேட்டர் உரிமையாளர்கள் கடும் அவதியடைந்தனர். எனவே தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கேரள அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கேரளாவில் சினிமா தியேட்டர்களை திறக்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் வரும் 5ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம். ஆனால் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முக கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது உட்பட நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.