நாடு முழுவதும் 259 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை.. தமிழ்நாட்டில் 17 மையம்..
நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் இன்று(ஜன.2) கொரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் ஒரு கோடியே இரண்டரை லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து, இந்திய அரசும் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, இன்று நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் சென்னை, நீலகிரி, நெல்லை, கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சாந்தோம் மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஆரம்பச் சுகாதார மையங்கள், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் அரசு மருத்துவமனைகள், நெல்லக்கோட்டை ஆரம்பச் சுகாதார மையம், திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, சமாதான புரம் ஆரம்பச் சுகாதார மையம், ரெட்டியார் பட்டி ஆரம்பச் சுகாதார மையத்திலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் மற்றும் திருமழிசை ஆரம்பச் சுகாதார மையம், கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் நிறுவனம், சூலூர் அரசு மருத்துவமனை, எஸ்.எல்.எம். ஹோம் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார மையம், பூலுவாப்பட்டி ஆரம்பச் சுகாதார மையம் என 17 மையங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இது வரை 21,170 சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.