நாட்டுக்கே பேராபத்து - ஐபிஎல் போராட்டக்காரர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் கருத்து

வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பில் கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம், மார்ச் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடித்தது.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மவுன போராட்டம் சாலை, ரயில் மறியல் என தொடர் போராட்டங்களை அரசியல் கட்சிகள், விவசாயா அமைப்புக்கள், இயங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடந்தி வருகின்றன. இதனால் தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டி காரணமாக, காவிரிக்காக நடைபெற்று வரும் போராட்டம் திசை திருப்பக்கூடும் எனக் கூறி சில அரசியல் கட்சிகள் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதனையடுத்து ஐபிஎல் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும், சென்னை அண்ணா சாலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போலீசார் தடுப்பு வேலி அமைத்து போராட்டக்காரர்களை மைதானம் நோக்கி செல்ல விடாமல் தடுத்தனர். போராட்டத்தின் போது காவலர்கள் மீதும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், போலீசார் தாக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் கூறியுள்ள ரஜினிகாந்த், “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>