20 வருடமே சர்வீஸ் 40 முறை டிரான்ஸ்பர் அசராத ரூபா ஐ.பி.எஸ்.

ரூபா ஐ.பி.எஸ். நினைவிருக்கிறதா? பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா ஷாப்பிங் சென்றது, பணம் வாங்கிக்கொண்டு சிறைத்துறை அதிகாரிகள் அவருக்குச் சலுகைகள் அளிப்பது போன்ற விவரங்களை வெளிக்கொணர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் இந்த ரூபா. அவர் கர்நாடக சிறைத்துறையில் இருந்தார். கடந்த ஜூலை மாதம் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார் கர்நாடகத்தின் முதல் பெண் உள்துறை செயலாளர் என்ற பெருமையும் பெற்றார். ஆனால் அந்தப் பதவியை ஆறு மாதம் கூட நீடிக்கவில்லை தற்போது இவர் மாநில கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். 20 ஆண்டுக்கால பணியிடத்தில் 40 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறார் ரூபா.

கர்நாடகாவின் ஐ.பி.எஸ் அதிகாரியான ஹேமந்த் நிம்பால்கர் என்பவருடன் ஏற்பட்ட பகிரங்கமான மோதல்தான் இந்த இடமாற்றத்திற்குக் காரணம் என்கிறார்கள்.நிம்பல்கர் உள் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு பெங்களூரில் கூடுதல் ஆணையராக இருந்தார். நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.619 கோடி பெங்களூரு பாதுகாப்பான நகரத் திட்டத்தின் டெண்டர் பணியில் முறைகேடு செய்ததாக டி ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் உருவானது. ரூபா அதிகார வரம்பை மீறி டெண்டர் விவகாரங்களில் தலையிடுகிறார் என்பது நிம்பக்லரின் குற்றச்சாட்டுஇடமாற்றத்திற்குப் பிறகு புதிய பதவியில் பொறுப்பேற்றுக்கொண்ட ரூபா ட்விட்டரில் "என் பணிக்காலத்தின் ஆண்டுகளை விட இரண்டு மடங்கு அதிக முறை நான் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருக்கிறேன் . தவறுகளை வெளிக் கொண்டு வந்தது மற்றும் சில உறுதியான நடவடிக்கைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம். அது எனக்குத் தெரியும். ஆனால் நான் தொடர்ந்து எனது வேலையைச் சமரசமின்றி செய்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.இன்னொரு ட்வீட்டில் முக்கியமானது என்னவெனில், பொது நலன் உறுதிப்படுத்தப்பட வேண்டும், ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். எனது பணிமாற்றம் மூலம் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வழி வகுத்தால், அதை நான் வரவேற்பேன் என்றும் பதிவு செய்துள்ளார்.

More News >>