சின்னதம்பி பட தயாரிப்பாளர் கே.பாலு மரணம்.. கொரோனாவிலிருந்து குணம் ஆனவர்..

பிரபு-குஷ்பு நடிக்க பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் சின்னதம்பி. இளைய ராஜா இசை அமைத்திருந்தார். பாடல்களும் பெரிய வெற்றி பெற்றன. இப்படத்தை கே பி பிலிம்ஸ் கே.பாலு தயாரித்திருந்தார். மேலும் இவர், விஜயகாந்த், சத்யராஜ்,ராம்கி, அர்ஜூன் நடித்த படங்களும் தயாரித்துள்ளார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். இந்நிலையில் நேற்று இரவு மாரடைப்பில் மரணம் அடைந்தார்.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் வெளியிடப்பட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் சின்னத்தம்பி, உள்ளத்தில் நல்ல உள்ளம், பாஞ்சாலங்குறிச்சி, ஆகா என்னப் பொருத்தம் உட்பட 25 வெற்றிப் படங்களுக்கு மேல் தயாரித்தவரும் தமிழ்த் திரைப் படத் தயாரிப்பாளர் சங்கத்தில் கே.ஆர்.ஜி. சத்யஜோதி தியாகராஜன், இராம நாராயணன், எஸ்.ஏ.சந்திர சேகர், கே.ஆர், கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் தலைவர்களாக இருந்த பொழுதும் தற்பொழுது என் .இராமசாமி என்கிற முரளி இராம நாராயணன் தலைவராக இருக்கையிலும் தொடர்ந்து செயற்குழு உறுப்பினராகப் பதவி வகித்து வந்தவர் கே.பி. பிலிம்ஸ் உரிமையாளரான . கே.பாலு. இவர் நேற்று இரவு காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெறுகிறது.

கே.பாலு மறைவுக்குத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி இராம நாராயணன், துணைத் தலைவர்கள் எஸ்.கதிரேசன்,ஆர்.கே.சுரேஷ், செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், டி. மன்னன், பொருளாளர் எஸ்.சந்திர பிரகாஷ் ஜெயின், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டு லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சுவாமிநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். அதேபோல் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். அடுத்த சில நாட்களில் அவரது உடல்நிலை மோசமானது. தீவிர சிகிச்சைக்கு பிறகு கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தார் ஆனால் நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார்.

கொரோனா பாதிப்பு திரையுலகினரை பல மாதங்கள் முடக்கிப் போட்டுப் பல கோடிகளை நஷ்டம் அடையச் செய்துள்ளது. 2020ம் ஆண்டில் திரையுலக பிரபலங்கள் இந்தி நடிகர் ரிஷி கபூர், இர்பான் கான், சிரஞ்சீவி சார்ஜா, சேது, போன்ற பிரபலங்கள் பலரின் மரணம் திரையுலகைச் சோக கடலில் ஆழ்த்தியது. 2021ம் ஆண்டு தொடக்கமும் சோக மயமாகவே தொடங்கி உள்ளதே எனக் கோலிவுட்டில் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

More News >>