கேரளாவில் 5ம் தேதி தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லை பிலிம் சேம்பர் நிர்வாகி தகவல்
கேரளாவில் ஜனவரி 5ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள போதிலும், பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் அன்று தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்று கேரள பிலிம் சேம்பர் தலைவர் தெரிவித்துள்ளார்.கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவிலும் கடந்த மார்ச் முதல் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் சினிமா தியேட்டர்களை நிபந்தனைகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தமிழ்நாடு ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் கேரளாவிலும் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், கேரள பிலிம் சேம்பர், நடிகர்கள் சங்கம் உள்பட திரைத்துறையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து விரைவில் பரிசீலிக்கப்படும் என்று கடந்த மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயன் மலையாள திரைத் துறையினருக்கு உறுதியளித்திருந்தார். இந்நிலையில் வரும் 5ம் தேதி முதல் கேரளாவில் நிபந்தனைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், தியேட்டர்களில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறினார்.
ஆனால் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள போதிலும் 5ம் தேதி முதல் இதை செயல்படுத்த முடியுமா என்பது சந்தேகமே என்று கேரள பிலிம் சேம்பர் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிலிம் சேம்பர் தலைவர் விஜயகுமார் கூறியது: கேரளாவில் அனைத்து சினிமா தியேட்டர்களும் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் பராமரிப்பு பணிகள் நடத்தினால் மட்டுமே தியேட்டர்களை திறக்க முடியும். இதற்கு லட்சக்கணக்கில் செலவாகும். ஏற்கனவே கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள தியேட்டர் உரிமையாளர்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்தும். 5ம் தேதிக்குள் தியேட்டர்களில் பராமரிப்பு பணிகளை நடத்த வாய்ப்பில்லை. தியேட்டர்களை திறப்பதற்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
இது குறித்து பல்வேறு சங்கத்தினருடன் ஆலோசனை நடத்திய பின்னரே இது தொடர்பாக இறுதி முடிவெடுக்க முடியும். தியேட்டர்களை திறப்பது தொடர்பாக ஆலோசிக்க 5ம் தேதி பிலிம் சேம்பர் சார்பில் ஒரு கூட்டம் நடத்தப்பட உள்ளது. அந்தக் கூட்டத்தில் தான் இறுதி முடிவெடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே தியேட்டர்களுக்கு புதிய சினிமாக்களை கொடுக்க முடியாது என்று விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தியேட்டர் உரிமையாளர்கள் லட்சக்கணக்கில் பணம் தர வேண்டி இருப்பதால் படங்களை கொடுக்க முடியாது என்று கேரள சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அடுத்த வாரத்தில் கேரளாவில் தியேட்டர்களை திறப்பது சந்தேகமாகவே உள்ளது.