காங்கிரசில் மட்டுமே சாத்தியம்.. 32 துணை தலைவர்கள்.. 57 பொதுச் செயலாளர்கள்..
தமிழக காங்கிரஸ் கட்சியில் அத்தனை கோஷ்டிகளிலும் உள்ள அனைவருக்குமே பதவி தரப்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளில் பொதுச் செயலாளர் என்ற பதவி முக்கியமான பதவியாக இருக்கும். இதில் ஒருவரே இருப்பார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இப்போது 57 பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த கட்சியில் எப்போதும் தொண்டர்களை விடத் தலைவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொரு பொறுப்பிலும் ஏகப்பட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், காங்கிரஸ் குழுக்கள் மற்றும் நிர்வாகிகளை நியமித்து அகில இந்தியக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
இதன்படி, முன்னாள் எம்எல்ஏ பலராமன், கோபண்ணா, நாசே ராமச்சந்திரன், தாமோதரன், ஏபிசிவி சண்முகம், முருகானந்தம், பொன் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் மணிரத்னம், டாக்டர் விஜயன், தீர்த்தாராமன், வாலஜா ஹசன், ஜி.ராஜேந்திரன், எம்.என்.கந்தசாமி, செந்தமிழ் அரசு, சுஜாதா, அழகு ஜெயபால், ராபர்ட் புரூஸ், ராஜாதம்பி, சதாசிவலிங்கம், இமயகக்கன், கீழானூர் ராஜேந்திரன், சாமுவேல் ஜார்ஜ், செந்தில்குமார், சுப்பா சோமு, ராமசுகந்தன், டாக்டர் செழியன், ரங்க பூபதி, ஏகத்தார் ஆனந்தன், குலாம் மொய்தீன், இதயாதுல்லா, சுவர்ணா சேதுராமன், முத்துகுமார் ஆகிய 32 பேர் கட்சியில் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல், முன்னாள் எம்எல்ஏக்கள் சுந்தரம், அருள் அன்பரசு உள்பட 57 பேர் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல், 104 செயலாளர்களும், 56 செயற்குழு உறுப்பினர்களும், 32 மாவட்டத் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 34 பேர் கொண்ட தேர்தல் குழுவும், இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் 19 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவும், திருநாவுக்கரசர் தலைமையில் 38 பேர் கொண்ட பிரச்சாரக் குழுவும், கே.வி.தங்கபாலு தலைமையில் 31 பேர் கொண்ட விளம்பரக் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 24 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழுவும், கோபண்ணா தலைமையில் 16 பேர் கொண்ட மீடியா ஒருங்கிணைப்புக் குழுவும், கே.ஆர்.ராமசாமி தலைமையில் 6 பேர் கொண்ட தேர்தல் நிர்வாகக் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நல்ல வேளையாக, பொருளாளராக ரூபி மனோகரன் ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்.