விஜய்யை பார்த்து மோகன்லால் நடந்து கொள்ள வேண்டும் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆவேசம்...!
தற்போதைய சூழ்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடாமல் தியேட்டர்களில் வெளியிட முடிவெடுத்துள்ளார். அவரைப் போல மோகன்லாலும் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர் லிபர்ட்டி பஷீர் கூறியுள்ளார்.மலையாளத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் கடந்த 7 வருடங்களுக்கு முன் வெளியான படம் திரிஷ்யம். இந்தப் படம் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மலையாள சினிமாவில் முதலில் 50 கோடியை கடந்த படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் திரிஷ்யம் 2 என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தை மோகன்லாலின் நெருங்கிய நண்பரான ஆண்டனி பெரும்பவூர் தயாரித்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா உள்பட பெரும்பாலான நடிகர், நடிகைகள் இந்தப் படத்திலும் நடித்துள்ளனர். தியேட்டரில் தான் திரிஷ்யம் 2 வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஓடிடி தளமான அமேசான் பிரைமில் இந்தப் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன்லாலின் இந்த நடவடிக்கைக்கு பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளரும், கேரள சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவருமான லிபர்ட்டி பஷீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது: மோகன்லாலும், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரும் தியேட்டர்களில் சினிமாக்களை வெளியிட்டதின் மூலம் தான் புகழ் பெற்றார்கள். ஆனால் அந்த நன்றி அவர்கள் இருவருக்கும் இல்லை. வெறும் பொருளாதார லாபத்திற்காக ஆண்டனி பெரும்பாவூர் இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை என நான் கருதுகிறேன். ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடுவதற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம். 100 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இன்னொரு மோகன்லால் படமான மரைக்கார், மார்ச்சில் தியேட்டரில் தான் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அப்படி இருக்கும் போது திரிஷ்யம் 2வை ஏன் ஓடிடி தளத்தில் வெளியிடத் தீர்மானித்தார்கள் எனத் தெரியவில்லை. மலையாள நடிகர் சங்கத் தலைவரான மோகன்லால் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான ஆண்டனி பெரும்பவூர் ஆகியோரே இப்படி ஓடிடி தளத்தில் படங்களை வெளியிட்டால் மற்றவர்களும் அவர்களைப் பின்பற்றத் தொடங்கினால் நிலைமை மோசமாகி விடும். தற்போதைய மோசமான சூழ்நிலையிலும் நடிகர் விஜய் தன்னுடைய மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடாமல் தியேட்டர்களில் தான் வெளியிடுவேன் எனக் கூறியுள்ளார். விஜய்யை பார்த்து மோகன்லாலும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.