பாடகியாக மாறிய கண்ணடி நடிகை..
கறுப்பு வெள்ளை காலத்தில் நடிகர், நடிகைகளுக்குச் சொந்தமாக பாடவும் தெரிந்திருந்தால் தான் படங்களில் வாய்ப்பு கிடைக்கும். பியூ.சின்னப்பா, தியாகராஜ பாகவதர் முதல் என். எஸ்.கிருஷ்ணன் வரை நல்ல குரல் வளம் கொண்டவர்கள். அதேபோல் பானுமதி கேபி சுந்தரம்பாள், வரலட்சுமி, ஜெயலலிதா போன்றவர்களும் சொந்த மாக பாடி நடித்தார்கள். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் பின்னணி பாடகர்கள் டிஎம்சவுந்திர ராஜன், எஸ்பிபாலசுப்ர மணியம், பி.சுசீலா, எஸ்.ஜானகி எனப் பலர் படங்களில் நடிகர் நடிகைகளுக்குப் பின்னணி குரல் கொடுத்துப் பாடினார்கள்.
தற்போது நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, தனுஷ் போன்றவர்கள் சொந்த குரலில் பாடுகின்றனர். அதேபோல் நடிகைகள் லட்சுமி மேனன், ரம்யா நம்பீஸன், பார்வதி போன்றவர்கள் சொந்த குரலில் பாடுகின்றனர். இவர்கள் தாங்கள் நடிக்காத படங்களில் பின்னணி பாடல்கள் பாடி இருக்கிறார்கள். அந்த வரிசையில் மற்றொரு நடிகை இடம் பிடித்திருக்கிறார்.
ஒரு அடார் லவ் படத்தில் கண்ணடித்துப் பாடல் காட்சியில் நடித்தவர் பிரியா வாரியர். ஒரே இரவில் இந்த காட்சி இணைய தளத்தில் உலகம் முழுவதும் பரவி வைரலானது. ஹாலிவுட் நடிகர்கள், பாலிவுட் நடிகர்கள் கூட பிரியா வாரியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவர் பெரிய அளவில் நடிகைகள் மத்தியில் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் அது நடக்காமல் போனது. ஒரு அடார் லவ் படம் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. மேலும் கண்ணடித்து பிரபலம் ஆன நடிகை பிரியா வாரியர் தன்னை தேடி வந்த படங்களை ஏற்காமல் அதிக சம்பளம் கேட்டதில் அந்த வாய்ப்புகளை கோட்டை விட்டார். இந்தியில் நடிக்கச் சென்று ஒரு படத்தில் நடித்தார் அங்கும் பெரியதாகப் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தற்போது அவரது பார்வை தெலுங்கு பக்கம் திரும்பி இருக்கிறது. தெலுங்கில் இசை அமைப்பாளர் ஸ்ரீ சரண் பகலாவின் இசை அமைப்பில் தனிப் பாடல் ஒன்றைப் பாடி இருக்கிறார். இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது. சிறு வயதிலிருந்தே பிரியா வாரியர் கர்நாடக இசை கற்று வந்திருக்கிறார். மலையாள படங்களில் அவர் சில பாடல்கள் பாடி உள்ளார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் நிதின் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் புதிய படமொன்றில் பிரியா வாரியர் டோலிவுட்டில் நடிகை அறிமுகமாக உள்ளார்.