உலகுக்கு தெரியாமலிருந்த காமெடி நடிகரின் திறமை..
திரைத்துறையில் நடிக்க வரும் நடிகர், நடிகைகளில் சிலர் நடிப்புக்கு அப்பாற்பட்டுப் பிற கலைகளில் வல்லுனர்களாக இருக்கின்றனர். சீனியர் நடிகர் சிவகுமார் நடிக்க வருவதற்கு முன் ஓவிய கல்லூரியில் படித்தார். பின்னாளில் அவர் வரைந்த பல ஓவியங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.சில ஆண்டுக்கு முன் தான் வரைந்த ஓவியங்களை வைத்து கண்காட்சி நடத்தினார். அவரைப் போலவே காமெடியனாக மட்டுமே திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் தெரிந்திருந்த நடிகரின் ஓவியத் திறமை தற்போது வெளியில் தெரிய வந்திருக்கிறது.
தெலுங்கில் 100கணக்கான படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருப்பவர் பிரமானந்தம். இவர் தமிழிலும் தானா சேர்ந்த கூட்டம் , ராக்கி தி ரிவென்ஞ், இஞ்சி இடுப்பழகி, வாலு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். நடிப்புக்கு அப்பாற்பட்டு இவர் பென்சிலால் ஓவியம் வரையும் திறமை படைத்தவர். தத்ரூபமாக அவர் வரைந்துள்ள வெங்கட ஜலபதி படம் பெரும் பாராட்டு பெற்று வருகிறது. அதேபோல் ராமர் நெஞ்சில் சாய்ந்திருக்கும் அனுமார் படமும் பாராட்டு பெற்றிருக்கிறது.
பிரமானந்தம் ஆயிரத்துக்கும் அதிகமான படங்களில் நடித்தவர் என்ற வகையில் கின்னஸ் ரெக்கார்டில் பதிவாகி இருக்கிறார். மேலும் பத்மஸ்ரீ விருதும், மாநில அரசின் விருதும் பெற்றிருக்கிறார். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த இவருக்கு லக்ஷ்மி என்ற மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு பிரமானந்தத்துக்கு மும்பை மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சையும் நடந்தது.