இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி...!
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சவுரவ் கங்குலி (48) இன்று கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை பிடிஐ மற்றும் ஏஎன்ஐ செய்தி நிறுவனங்கள் தான் முதலில் வெளியிட்டன. அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த தகவலை தனது டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். தற்போது கங்குலியின் திருப்திகரமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். கங்குலிக்குச் சிகிச்சை அளிப்பதற்காக உட்லண்ட்ஸ் மருத்துவமனை நிர்வாகிகள் சிறந்த டாக்டர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமித்துள்ளது.
மேலும் கூடுதல் பரிசோதனைகளுக்காக எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்னுடைய டுவிட்டரில் கூறியிருப்பது: மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலைக் கேட்டு நான் வேதனை அடைந்தேன். விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய பிரார்த்தனையைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தன்னுடைய ட்விட்டரில், சவுரவ் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அவருடைய குடும்ப உறுப்பினர்களுடன் நான் பேசினேன்.
தாதாவின் உடல்நிலை தற்போது திருப்திகரமாக இருப்பதாக அவர்கள் கூறினர் என்று குறிப்பிட்டுள்ளார். சவுரவ் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என்று இந்திய கேப்டன் அஜிங்கியா ரஹானே, விராட் கோஹ்லி, ஷிகர் தவான் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான வீரேந்தர் சேவாக், முகமது கைப், ஹர்பஜன் சிங் ஆகியோர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.