விதிகளை மீறிய ரோகித் சர்மா உட்பட ஐந்து வீரர்கள்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடர்களை முடித்த கையோடு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணியும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தனது காதல் மனைவியின் முதல் பிரசவத்தை முன்னிட்டு முதல் போட்டியை முடித்துவிட்டு தாயகம் திரும்பினார். பின்னர் துணை கேப்டன் ரகானே பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரின் தலைமையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக ஷமி, உமேஷ் யாதவ் விலகிய நிலையில், கோலியும் விருப்ப ஓய்வு பெற்றதால் அணியின் நிலைமை மோசமாகி உள்ளது. இந்நிலையில் ரோகித் அணிக்குத் திரும்பியுள்ளது அணியின் நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், சுப்மான் கில், ப்ரித்வி ஷா மற்றும் நவ்தீப் சைனி உள்ளிட்டோர் மெல்போர்னில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு உணவருந்தி முடித்து விட்டு திரும்பும் போது, இந்திய ரசிகர் ஒருவர் விக்கெட் கீப்பரான ரிஷாப் பண்ட்டை கட்டிப்பிடித்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது.
இதனால் இவர்கள் கோவிட்-19 விதியை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கையாக இவர்கள் ஐந்து பேரும் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். இது பற்றிய விசாரணையை இந்திய நிர்வாகம் மற்றும் ஆஸ்திரேலியா நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதனால் இவர்கள் மூன்றாவது போட்டியில் விளையாடுவதே சந்தேகமாகி உள்ளது.