ரஜினி அரசியல் விலகல் பின்னணி... ஹைதராபாத்தில் என்ன நடந்தது?!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமுடியவில்லை என்று அறிவித்ததற்கு தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் மோகன் பாபு முக்கிய காரணமாக இருந்தாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நடிகர் ரஜினிகாந்த், சென்னை திரும்பி உடனே ரசிகர்களை பதற வைக்கும் அறிக்கையை ஒன்றை வெளியிட்டார். அதில், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.
இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள் என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார். உடல்நிலை காரணங்களை முன்வைத்த ரஜினியின் இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், ரஜினியின் இந்த முடிவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், இயக்குநர்கள் என பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர். ரஜினி தனது சொந்த காரணங்களுக்காக எடுத்த முடிவை மதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இணையதளத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்தது.
இதற்கிடையே, தனது உடல்நிலை காரணமாக அரசியலில் இருந்து ரஜினிகாந்த் விலகுவதாக அறியமுடிகிறது. இருப்பினும், அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்ற ரஜினியை சந்தித்த அவரின் இரு சினிமா நண்பர்கள் கொடுத்த அறிவுரை காரணமா தான் அரசியலுக்கு வரமுடியவில்லை என்று அறிவித்ததாக ஆந்திரப் பிரதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் மோகன் பாபுவும் சில நாட்களுக்கு முன்பு ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அண்ணாத்த படப்பிடிப்பிலிருந்து இருந்த ரஜினியை சந்தித்து பேசியதாகவும், அப்போது, ரஜினி கட்சி மற்றும் அரசியல் தொடர்பாக ஆலோசனை கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆந்திராவில் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், அரசியல் என்பது ஓர் அழுக்கு படிந்தத் துறை. ஒரு திரைப்பட நடிகராக நீங்கள் அனுபவிக்கும் மரியாதையும் பாசமும் நீங்கள் அரசியலில் நுழைந்தால் இருக்காது என்று சிரஞ்சீவியும் மோகன் பாபுவும் ரஜினியை எச்சரித்தனர். குறிப்பாக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி அரசியல் தனது நேர்ந்த அனுபவத்தை நடிகர் ரஜினியிடம் தெரிவித்துள்ளார். எனவே, சீரஞ்சீவி அறிவுரையை ஏற்று நடிகர் ரஜினி அரசியலில் இருந்து விலக ஒப்புக்கொண்டார்.
ஏற்கெனவே கட்சியைத் தொடங்குவதாக அறிவித்திருந்ததால், எப்படி அரசியலில் இருந்து விலகுவது, எனது மீது விமர்சனங்கள் கடுமையாக இருக்கும் என்று ரஜினி பயந்துள்ளார். இதற்கிடையே, உடல் நிலை சரியில்லாமல் போனதால், இதனை காரணம் காட்டி அரசியலுக்கு வர முடியவில்லை என்று ரஜினி அறிவித்ததாக செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.