மும்பை சீனியர் அணியில் இடம்பிடித்தார் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு மும்பை சீனியர் அணியில் இடம் கிடைத்துள்ளது. செய்யது முஷ்டாக் அலி டிராபி போட்டிக்கான 22 பேர் கொண்ட அணியில் இவர் இடம் பிடித்துள்ளார்.சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். மும்பை அணியில் பல்வேறு வயது பிரிவில் இவர் பலமுறை கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது முதன் முதலாக அர்ஜுனுக்கு மும்பை சீனியர் அணியில் இடம் கிடைத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் உள்ளூர் போட்டிகளையும் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது. முதலில் செய்யது முஷ்டாக் அலி டிராபிக்கான போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது. இதற்காக 22 பேர் கொண்ட மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பிடித்துள்ளார்.

முதலில் 20 பேர் கொண்ட அணியை அறிவிக்கத் தான் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் 2 வீரர்களைச் சேர்த்து 22 பேர் கொண்ட மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் தவிர கிருத்திக் ஹனகவாடி என்ற வேகப்பந்து வீச்சாளரும் சேர்க்கப்பட்டுள்ளார். 21 வயதான அர்ஜுன் டெண்டுல்கர் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியிலும் விளையாடியுள்ளார். இது தவிர இந்திய கிரிக்கெட் அணியின் வலை பந்து வீச்சாளராகவும் இருந்துள்ளார். மும்பை அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

More News >>