உருமாறிய கொரோனா வைரஸ் சவுதி அரேபிய எல்லைகள் மீண்டும் திறப்பு
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த இரு வாரங்களாக மூடப்பட்டிருந்த சவுதி அரேபியாவின் எல்லைகள் இன்று முதல் திறக்கப்பட்டன. சர்வதேச விமானப் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து சவுதிக்கு நேரடியாகச் செல்ல முடியாது.இங்கிலாந்தில் லண்டன் உள்பட சில பகுதிகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது. ஏற்கனவே பரவிவரும் வைரசை விட இந்த புதிய வகை வைரஸ் 70 சதவீதம் வேகத்தில் பரவுவதும் தெரியவந்தது.
இதையடுத்து இந்தியா, பிரான்ஸ், சவுதி அரேபியா, ஜெர்மனி உட்பட பெரும்பாலான நாடுகள் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதற்கிடையே சவுதி அரேபியா கடந்த மாதம் 20ம் தேதி முதல் தன்னுடைய வான், சாலை மற்றும் கடல் எல்லைகளை மூடியது. சர்வதேச விமான போக்குவரத்தையும் நிறுத்தி வைத்தது. இதனால் கடந்த இரு வாரங்களாக சவுதி அரேபியாவுக்கு எந்த நாட்டில் இருந்தும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து சவுதி சென்றவர்கள் அமீரக நாடுகளில் சிக்கினர்.
இந்நிலையில் இன்று முதல் சவுதி அரேபியா தன்னுடைய எல்லைகளை திறந்துள்ளது. இன்று காலை முதல் சர்வதேச விமானப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் முழுமையான அளவில் விமானப் போக்குவரத்து போக்குவரத்து தொடங்கப்படவில்லை. எனவே சவுதிக்குச் செல்பவர்கள் அமீரக நாடுகளுக்குச் சென்று அங்கு ஒரு வாரம் தனிமையில் இருந்த பின்னரே சவுதிக்குச் செல்ல முடியும். எல்லைகள் மூடப்படுவதற்கு முன்பாக அமீரக நாடுகளில் சிக்கியவர்கள் இனி சவுதிக்கு உடனடியாக செல்லலாம்.