ஆன்லைன் ரம்மி விளையாடி ₹ 20 லட்சம் பறிபோனது வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

ஆன்லைனில் ரம்மி விளையாடி 20 லட்சத்திற்கு மேல் பணம் பறிபோனதால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவனந்தபுரம் அருகே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.சமீபகாலமாக ஆன்லைனில் பணம் வைத்து ரம்மி விளையாடுவது அதிகரித்து வருகிறது.ஏராளமானோர் இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி வருகின்றனர். இதன் மூலம் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இதேபோல கேரளாவில் ஒரு வாலிபர் ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் கடன் வாங்கியதால் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடை குற்றிச்சல் என்ற இடத்தை சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மனைவி ஹரிஜா குமாரி. இவர்களுக்கு வினீத் (28), விஜீஷ் (26) என்ற 2 மகன்கள் உண்டு. வினீத் திருவனந்தபுரம் அருகே உள்ள வலியமலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ஐஎஸ்ஆர்ஓ) தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்தது.

ஆனால் இந்த விவரம் அவரது நெருங்கிய நண்பர்களுக்கோ, பெற்றோருக்கோ கூட தெரியாது.குறுகிய நாட்களிலேயே இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு வினீத் அடிமையானார். தொடக்கத்தில் இவருக்கு சிறிதளவு பணம் கிடைத்து வந்துள்ளது. மேலும் அதிக பணம் கிடைக்கும் என கருதி கடன்வாங்கி விளையாடி வந்தார். ஆனால் பின்னர் இவருக்கு பணம் எதுவும் கிடைக்கவில்லை. நாளடைவில் இவரது கடன் தொகை 20 லட்சத்தையும் தாண்டியது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். இதனால் வினீத் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் நேற்று முதல் இவரை திடீரென காணவில்லை.

இது குறித்து வினீதின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் உள்ள மரத்தில் வினீத் தூக்குப் போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன்லைனில் விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தான் வினீத் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

More News >>