தக.. தக..தங்கத்தில் ஜொலிக்க போகுது திருப்பதி கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நுழைவு வாயில், கொடி மரம், பலிபீடம் ஆகியவற்றில் புதிய தங்கத் தகடுகள் பதிக்கும் பணி தொடங்கியது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராஜகோபுர நுழைவு வாயில், கொடிமரம் மற்றும் பலிபீடம் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த தங்கத் தகடுகள் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே அதனை மாற்றி புதிய தங்க தகடுகள் பதிக்க அறங்காவலர் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இதற்காக 6.6 கிலோ தங்கத்தால் 3.13 கோடி செலவில் தங்கத் தகடுகள் பதிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தங்கத்துடன் 68 கிலோ தாமிரம் சேர்த்து புதிய தகடுகள் தயார் செய்யப்படும். இந்த பணிகளை இரண்டு மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது .விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் முதல் பல அரசர்கள், ஆங்கிலேயர்கள் காலத்தில் திருப்பதி கோயிலில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டது.

1958ல் மூலவர் குடியிருக்கும் கருவறையின் மேல் உள்ள ஆனந்த நிலையம் பகுதியில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டது. இதற்காக 120 கிலோ தங்கம், 12 டன் செம்பு, பயன்படுத்தப்பட்டது. 2007 ல் மணி மண்டபம், கோயிலில் உள்பகுதியில் இருக்கும் 34 கதவுகளில் 16 கதவுகளுக்கு மட்டும் தங்க தகடு பதிக்கப்பட்டது. 2013 ஆண்டு மீதமுள்ள 18 கதவுகளுக்குத் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டது.

தற்பொழுது ராஜகோபுரம் நுழைவுவாயில், பலிபீடம், தங்கக் கொடி மரம் ஆகியவை புதிய தங்கத் தகடுகளால் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் ஏழுமலையான் கோவிலின் நுழைவு வாயிலான ராஜகோபுரத்திலிருந்து மூலஸ்தானம் அருகே தரிசனம் செய்யும் மணிமண்டபம் வரை உள்ள இடங்கள் அனைத்தும் இனி தங்கத் தகடுகளால் பள..ப்..பள..வென ஜொலிக்க போகிறது.

More News >>