கோவிஷீல்ட், கோவாக்சின் இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி
இந்தியாவில் 2 கொரோனா தடுப்பு ஊசிகளைப் பயன்படுத்துவதற்கு இறுதி அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்ற 2 தடுப்பூசிகளுக்குத் தான் தற்போது அனுமதி கிடைத்துள்ளது.கடந்த பல மாதங்களாக பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி இந்தியாவில் விநியோகத்திற்குத் தயாராகி விட்டது. இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த பூனா சிரம் இன்ஸ்டியூட் தயாரிக்கும் கோவாக்சின் என்ற தடுப்பூசிக்கு நேற்று மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்தது.
இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கோவாக்சின் என்ற தடுப்பூசிக்கும் நிபந்தனைகளுடன் தற்போது மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தற்போது இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் தயாராக உள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசியைச் சோதித்துப் பார்த்ததில் 70.42 சதவீதம் வெற்றி கிடைத்துள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். அவசர கட்டத்தில் பயன்படுத்துவதற்காக நிபந்தனைகளுடன் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மிகவும் கவனமாக இந்த தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே சிடஸ் காடிலா நிறுவனத்தின் தடுப்பூசிக்கான மூன்றாவது கட்ட ஆய்வுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைக்கு கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மட்டுமே இந்தியாவில் பெருமளவு பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது. முதல் கட்டமாக மூன்று கோடி பேருக்கு இந்த தடுப்பூசி போடப்படும். டாக்டர்கள், நர்சுகள் உள்படச் சுகாதாரத் துறையை சேர்ந்த 1 கோடி பேருக்கும், காவல்துறை, பாதுகாப்பு வீரர்கள், தூய்மை தொழிலாளர்கள் உட்பட 2 கோடி பேருக்கும் தடுப்பூசி போடப்படும்.
இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறினார். முன்னுரிமை பட்டியலில் உள்ள மீதமுள்ள 27 கோடி பேருக்கும் வரும் ஜூலை மாதத்திற்குள் தடுப்பூசி போடுவதற்காகத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார். நேற்று நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை வெற்றிகரமாக நடந்தது. இன்னும் ஒரு சில தினங்களில் தடுப்பூசி விநியோக பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.