சபரிமலையில் இன்று திடீர் தீ விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய போலீசார்
சபரிமலையில் இன்று காலை போலீசார் தங்கியிருந்த கன்டெய்னர் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடைபெற்ற போது போலீசார் யாரும் அங்கு இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 31ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்களுக்கு கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள்.
ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாகத் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வழக்கமாகச் சபரிமலையில் பக்தர்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால் தற்போது பக்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் போலீசாரும் குறைந்த எண்ணிக்கையிலேயே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே சபரிமலையில் கொரோனா பரவலும் அதிகரித்திருப்பதால் போலீசாரின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது சபரிமலை செல்லும் பக்தர்கள் தங்களது வாகனங்களை பம்பையில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நிலக்கல் என்ற இடத்தில் தான் நிறுத்த வேண்டும். இங்கு ஒரு போலீஸ் கட்டுப்பாட்டு அறையும், போலீஸ் நிலையமும் உள்ளது.நிலக்கல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தங்குவதற்கு அங்கு கன்டெய்னர் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் 5 போலீசார் தங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் ஒரு கன்டெய்னரில் திடீரென தீ பிடித்தது. அதிர்ஷ்டவசமாக அதில் தங்கியிருந்த போலீசார் பணிக்காக வெளியே சென்றிருந்தனர். சிறிது நேரத்தில் தீ வேகமாகப் பரவியது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். ஆனால் அதற்குள் அதிலிருந்த மேஜை, நாற்காலி, மின்விசிறி மற்றும் போலீசாரின் உடைமைகள் அனைத்தும் எரிந்தன. தீ பிடித்த போது அதில் போலீசார் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மின் கோளாறு தான் தீ விபத்துக்குக் காரணம் என போலீசார் கூறினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.