முக்கோணக் காதல் 19 வயது கல்லூரி மாணவி அடித்துக் கொலை காதலனுடன் பிடிபட்ட காதலி
முக்கோண காதலால் புது வருடக் கொண்டாட்டத்தின் போது 19 வயது கல்லூரி மாணவி அடித்துக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவியின் காதலனும், காதலியும் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்தவர் குக்ரேஜா. இவரது மகள் ஜான்வி (19). இவர் மும்பையில் உள்ள ஜெய்ஹிந்த் கல்லூரியில் சைக்காலஜி இளங்கலை படித்து வந்தார். ஜான்வியின் அதே பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீ ஜோக்தன்கர் (22). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே தியா படன்கர் (19) என்ற கல்லூரி மாணவியும் ஜோக்தன்கரை காதலித்து வந்துள்ளார். இந்த விவரம் காதலிகள் இருவருக்கும் தெரியாது. இந்நிலையில் ஜோக்தன்கரை ஜான்வி காதலிக்கும் விவரம் சமீபத்தில் தான் தியாவுக்கு தெரியவந்தது. இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜோக்தன்கரிடமிருந்து ஜான்வியை பிரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வந்தார். ஜான்வி குறித்து சில பொய்யான தகவல்களை ஜோக்தன்கரிடம் கூறியுள்ளார். அதை அவரும் நம்பியுள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து ஜான்வியை கொல்ல திட்டம் தீட்டினர்.
இந்நிலையில் புது வருட தினத்தன்று அதிகாலை 1 மணியளவில் ஜான்வியை அழைத்த ஜோக்தன்கர், புத்தாண்டு கொண்டாட வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து ஜான்வி அங்குள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றுள்ளார். அங்கு வைத்து ஜான்வியுடன் தியா தகராறு செய்தார். அப்போது தியாவும், ஜோக்தன்கரும் சேர்ந்து ஜான்வியை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின் இருவரும் சேர்ந்து ஜான்வியின் உடலைக் கீழே கொண்டு போட்டுவிட்டுத் தப்பிவிட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று ஜான்வியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். முதலில் அது விபத்தாக இருக்கலாம் என போலீசார் கருதினர்.
ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் கொலை எனத் தெரியவந்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் காதலன் ஜோக்தன்கர் மற்றும் அவரது காதலி தியா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஜான்வி பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே அவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா எனத் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். புத்தாண்டு தினத்தன்றே கல்லூரி மாணவி கொல்லப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.