கர்நாடகா, கேரளா எல்லையில் திருமண கோஷ்டி பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி... 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்...!
கர்நாடகா, கேரளா எல்லையில் உள்ள பாணத்தூர் என்ற இடத்தில் திருமண கோஷ்டி சென்ற பஸ் வீட்டின் மீது கவிழ்ந்து 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஈஸ்வரமங்கலம் என்ற இடத்தை சேர்ந்த ஒரு திருமண கோஷ்டியினர், கேரள எல்லையில் உள்ள செத்துகயம் என்ற இடத்தில் நடைபெறும் திருமணத்திற்காக ஒரு பஸ்சில் சென்றனர். இந்த பஸ்சில் திருமண வீட்டைச் சேர்ந்த 65 க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த பஸ் கேரள எல்லையில் உள்ள பாணத்தூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வளைவில் பஸ் வேகமாகத் திரும்பிய போது எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டின் மீது கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த பெரும்பாலானோர் காயமடைந்தனர். இது குறித்து அறிந்ததும் காசர்கோடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரேயஸ் (13), ரவிச்சந்திரா (40), இவரது மனைவி ஜெயலட்சுமி (38) ராஜேஷ் (45) உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்த அனைவரும் காஞ்சங்காடு பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பஸ் அதிவேகத்தில் வந்தது தான் விபத்திற்குக் காரணம் என போலீசார் கூறினர். பஸ் கவிழ்ந்த வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் மேலும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காஞ்சங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மரணமடைந்தவர்களுக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.