உபியில் மயானத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 18 பேர் பலி...
உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே மயானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு வந்த 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கனமழை காரணமாக இந்த விபத்து நடந்தது. கடந்த சில தினங்களாக டெல்லி, உத்திர பிரதேச மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காசியாபாத் அருகே உள்ள முராத்நகர் பகுதியில் உள்ள ஒரு மயானத்தில் இன்று ஒருவரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த சமயத்தில் மிகப் பலத்த மழை பெய்தது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் மயானத்தை ஒட்டியுள்ள ஒரு கட்டிடத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து அறிந்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்ட அனைவரையும் மிகுந்த சிரமத்திற்கு இடையே தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இவர்கள் அனைவரும் உடனடியாக அப்பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 10 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக காசியாபாத் எஸ் பி இராஜ் ராஜா கூறினார். இந்த விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.