முறைகேடாக பங்கு விற்பனை : முகேஷ் அம்பானிக்கு 40 கோடி அபராதம்
முறைகேடாக பங்கு விற்பனையில் ஈடுபட்ட ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் முகேஷ் அம்பானிக்குச் செபி அமைப்பு 40 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.செபி (SEBI) என்று அழைக்கப்படும் இந்தியப் பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் பங்கு வர்த்தகத்தில் நடக்கும் மோசடிகளைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.கடந்த 2007-ம் ஆண்டு ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தின் பங்குகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது அப்போது அதன் 4.1 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம், வாங்கி, விற்பனை செய்திருந்தது. இதற்கு முறையான அனுமதி பெறப்படவில்லை என்பதைச் செபி நிறுவனம் கண்டறிந்தது.
இதைத் தொடர்ந்து முறைகேடாக பங்கு வர்த்தகம் செய்தது தொடர்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி மற்றும் மும்பை எஸ்.இ.எஸ். நிறுவனம், நவிமும்பை எஸ்.இ.எஸ் நிறுவனம் ஆகியவற்றின் மீது செபி அபராதம் விதித்துள்ளது.ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.25 கோடியும், முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடியும், நவிமும்பையில் உள்ள எஸ்.இ.எஸ் நிறுவனத்துக்கு ரூ.20 கோடியும், மும்பையிலுள்ள எஸ்.இ.எஸ் நிறுவனத்துக்கு ரூ.10 கோடியும் அபராதம் விதித்துச் செபி உத்தரவிட்டுள்ளது.