மலையாள சினிமா பாடலாசிரியர் அனில் பனச்சூரான் திடீர் மரணம்.. ஜிமிக்கி கம்மல் பாடல் எழுதியவர்
பிரபல மலையாள சினிமா பாடலாசிரியரான அனில் பனச்சூரான் நேற்று திடீரென மரணமடைந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிர் பிரிந்தது. மலையாள சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருந்தவர் அனில் பனச்சூரான் (55). கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காயங்குளத்தில் 1965ல் பிறந்த இவர், எம்ஏ, எல்எல்பி முடித்து மலையாள சினிமாவுக்குள் நுழைந்தார். கல்லூரியில் படிக்கும் போதே இவர் கவிதையில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். 'மகள்க்கு' என்ற படத்தில் இவர் முதன்முதலாக ஒரு பாடல் எழுதினார். இதன் பின்னர் அரபிக்கதா, கத பறயும் போள், மாடம்பி, பிரமரம், பாசஞ்சர், பாடிகார்டு, மாணிக்கக் கல், சீனியர்ஸ், வெளிபாடின்டே புஸ்தகம் உள்பட ஏராளமான மலையாள படங்களில் இவர் பாடல்கள் எழுதி உள்ளார்.
அரபிக் கதை என்ற படத்தில் இவர் எழுதிய சோர வீண மண்ணில் நின்னு என்ற பாடலும், கத பறயும்போள் என்ற படத்தில் இவர் எழுதிய வெத்யஸ்தனாம் ஒரு பார்பராம் பாலனே என்ற பாடலும், வெளிபாடின்டே புஸ்தகம் என்ற படத்தில் என்டேம்மேடே ஜிமிக்கி கம்மல் என்ற பாடலும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஜிமிக்கி கம்மல் என்ற பாடல் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்கு வரும் நடனமும் மிகவும் பிரசித்தி பெற்றது. பாடல் எழுதுவதோடு மட்டுமில்லாமல் இவர் சினிமாவில் பாடவும் செய்துவந்தார். அரபிக்கதை படத்தில் வரும் சோர வீண மண்ணில் நின்னு என்ற பாடல் உள்பட ஏராளமான பாடல்களை இவர் பாடியுள்ளார். இந்நிலையில் நேற்று இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.
இதையடுத்து உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் உடல்நிலை மோசமானதால் அவர் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 9.30 மணியளவில் அவர் மரணமடைந்தார். அனில் பனச்சூரானின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மலையாள சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் காடு என்ற பெயரில் ஒரு படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்க திட்டமிட்டு இருந்தார்.