மழையிலும் 40வது நாளாக விவசாயிகள் போராட்டம்.. மத்திய அரசு மீண்டும் பேச்சு..
டெல்லியில் மழையிலும் 40வது நாளாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இன்று மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.4) 40வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலர் நடத்திய பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியுற்றன. இதற்கிடையே, பஞ்சாப்பில் விவசாய மண்டிகளின் ஏஜென்டுகளின் கம்பெனிகளில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர்.
இதனால், தங்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக விவசாயிகள் கருதினர். இதனால், பஞ்சாப்பில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செல்போன் டவர்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இத்தனை களேபரங்களுக்கும் இடையே டெல்லி எல்லைப் பகுதிகளான சிங்கு, சில்லா உள்ளிட்ட நான்கைந்து பகுதிகளில் பல ஆயிரம் விவசாயிகள் முகாமிட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர். டெல்லி-நொய்டா எல்லையில் சில்லா பகுதியில் நேற்று(ஜன.3) மழை பெய்தது. சாலைகளில் முடங்கியுள்ள விவசாயிகள், மழையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கூடாரங்களை அமைத்துள்ளனர். அந்த கூடாரங்களில் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளனர்.
கடைசியாக, டிச.30ம் தேதி மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் தெரிந்தது. எனினும், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது, குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் கொண்டு வருவது ஆகிய கோரிக்கைகளில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இன்று(ஜன.4) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி விடுத்துள்ள அறிக்கையில், விவசாயிகள் மழையிலும், குளிரிலும் இத்தனை நாளாக போராடி வருகிறார்கள். 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ விவசாயிகளுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.