கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கூடும் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 9 ஆயிரமாக உயர வாய்ப்பு

கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கூடும் என்றும், தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 9 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா நோயாளிகள் கேரளாவில் தான் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டனர். ஆனால் அதன் பின்னர் கேரளாவில் நோய் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா உள்பட மற்ற மாநிலங்களில் நோயாளிகள் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்த போது கேரளாவில் மட்டும் நோய் கட்டுக்குள் இருந்தது.

கேரளாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த மாநிலத்தை பார்த்து மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பரவலாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தினமும் சராசரியாக 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது. மரண எண்ணிக்கையும் கூடி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக நோயாளிகள் எண்ணிக்கை 1500ஐயும் விட குறைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் நேற்று 4,600 பேருக்கு நோய் கண்டுபிடிக்கப்பட்டது. நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த 25 பேர் நேற்று மரணமடைந்தனர். இதையடுத்து இதுவரை நோய் பாதித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,141 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 65 ஆயிரத்து 278 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கேரளாவில் 7 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவியுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த உள்ளாட்சி தேர்தல் மற்றும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தினமும் 9 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு மரண சதவீதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது கேரளாவில் மரண சதவீதம் 0.4 ஆக உள்ளது. இது 0.5 சதவீதமாக உயரும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

More News >>