தேர்தல் அதிகாரியிடம் டிரம்ப் பேசிய ஆடியோ டேப் வெளியானது.. அமெரிக்காவில் பரபரப்பு..

அமெரிக்க தேர்தலில் தோற்று போன டொனால்டு டிரம்ப், ஜார்ஜியா தேர்தல் அதிகாரியிடம் தனக்கு கூடுதல் வாக்குகளை செட்டப் செய்து தருமாறு கேட்டுள்ளார். இந்த ஆடியோ டேப் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி, தொடர்ந்து பல நாட்களாக நடைபெற்று வந்தது. கொரோனா அச்சம் காரணமாக பல லட்சம் மக்கள் மெயில் ஓட்டு எனப்படும் தபால் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

அவற்றை எண்ணுவதில்தான் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவேடா, மிக்சிகன், அரிசோனா ஆகிய முக்கிய மாநிலங்களில் தாமதம் ஏற்பட்டது. அதே சமயம், மொத்தம் உள்ள 538 எலக்டோரல் ஓட்டுகளில் மெஜாரிட்டிக்கு 270 ஓட்டுகளை பெற வேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நான்கைந்து நாளில் ஜோ பிடன் 290 எலக்டோரல் ஓட்டுகளை பெற்று விட்டார். ஆனால், டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தானே வெற்றி பெற்றதாக அறிவித்தார். அவரது குடியரசு கட்சியினர் ஐந்தாறு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி, வழக்கு தொடர்ந்தனர். அவற்றிலும் டிரம்ப்புக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, ஜன,20ம் தேதி அவர் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், ஜார்ஜியா மாநில தேர்தல் அதிகாரி ரபேன்ஸ்பெர்ஜரிடம் டிரம்ப் போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் டிரம்ப் தனக்கு கூடுதல் வாக்குகளை செட்டப் செய்து தருமாறு கேட்டுள்ளார். அதாவது, அந்த மாநிலத்தில் டிரம்ப்பை விட ஜோ பிடன் 11,779 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். டிரம்ப் அந்த அதிகாரியிடம் பேசுகையில், எனக்கு தேவை 11,780 வாக்குகள்தான். அதை பெற்று தாருங்கள். நாம்தான் அந்த மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளோம். வாக்கு எண்ணிக்கையை மாற்றி அறிவிக்கலாம் என்று கூறியிருக்கிறார். இந்த டேப் வெளியானதும் அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, டிரம்ப் பேச்சை ஜனநாயகக் கட்சியினர் கடும் விமர்சனம் செய்துள்ளனர். புதிய துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிசும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

More News >>