ஜாமீனில் வந்த நடிகை உடல்நிலை தேறியதா?
பெங்களுருவில் கடந்த ஆண்டு போதைபொருள் விற்கும் ஒரு கும்பலை போலீஸார் கைது செய்தனர். டிவி நடிகை ஒருவரும் நைஜீரியா ஆசாமியும் இதில் கைதானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி பெயரும் அடிபட்டது. இதையடுத்து போதை மருந்துதடுப்பு போலீசார் நடிகை ராகினி திவேதியை விசாரணைக்கு அழைத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அடுத்த சில நாளில் நடிகை சஞ்சனா கல்ராணியை விசாரணைக்கு அழைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பெங்களூர் பரப்பன அக்ஹாரா சிறையில் ராகினி, சஞ்சனா இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ராகினி புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் இரவில் நீண்ட நேரம் விளக்கு எரியவிட்டார். இது தனக்கு தொல்லையாக இருப்பதாகவும், தூக்கம் கெடுகிறது என்றும் சஞ்சனா தகராறு செய்தார்.
பிறகு இருவரும் தனித்தனியாக வேறு அறைகளில் உள்ள பெண் கைதியுடன் அடைக்கப்பட்டனர். கைதாகி சிறையிலிருந்த ராகினி தனக்கு ஜாமீன் வழங்கும்படி கீழ்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை. பிறகு அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். தான் நிரபராதி என்னை தவறாக கைது செய்திருக்கிறார்கள். எனவே ஜாமீன் தருமாறு கோரினார். இதுகுறித்து கீழ்கோர்ட்டிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது. இதற்கிடையில் சஞ்சனா கல்ராணி தனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு சிகிச்சை பெற வேண்டி தன்னை ஜாமீனில் விடுவிக்க கேட்டார். அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியதில் டாக்டர்கள் அவரது உடல்நிலையில் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து சஞ்சனாவுக்கு நிபந்தனை வழங்கப்பட்டது. 90 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு அவர் ஜாமீனில் வந்து வீட்டிலிருந்த படி சிகிச்சை பெற்று வருகிறார். சஞ்ஜனாவை நலம் விசாரித்து அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் மெசேஜ் அனுப்பி வருகின்றனர். தினமூம் மெசேஜ்கள் குவிந்த நிலையில் அவர் பதில் அளித்திருக்கிறார். அதில், தனிபட்ட முறையில் என்னிடம் இன்ஸ்டாமிரமில் ஏராளமானவர்கள் நலம் விசாரித்துள்ளனர். அதற்கு நன்றி. 1 மில்லியன் ரசிகர்கள் என்னை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளனர். உடல்நிலை சரியான பிறகு விரைவில் நான் சமூக வலைதள பக்கத்துக்கு வருவேன். என் குடும்பம், நண்பர்கள், இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கு நன்றி சொன்னால் மட்டும் போதாது என்று எண்ணுகிறேன் என்றார்.