ரஜினிகாந்த் அமெரிக்க பயணம்.. உடல்நிலை பரிசோதனை மேற்கொள்கிறார்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு ஐதரப்பாத்தில் நடந்த அண்ணாத்த ஷூட்டிங்கில் பங்கேற்க சென்றார். சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். சுமார் 14 மணி நேரம் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு இருந்தார். திடீரென்று அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 3 நாள் சிகிச்சை பெற்றவர் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி சென்னை திரும்பினார். அரசியல் கட்சி அறிவிப்பு வெளியிடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், அரசியலுக்கு வரவில்லை என்னை மன்னித்து விடுங்கள் என்று அறிவித்து ஷாக் கொடுத்தார்.
ரஜினிகாந்த் உடல்நிலையை கருதி டாக்டர்கள் அவரை முழு ஓய்வில் இருக்க கேட்டுக் கொண்டனர். அவரும் அதனை பின்பற்றி வருகிறார். இதற்கிடையில் ரஜினி ரசிகர்கள் பலர் அவர் வீட்டு முன்னால் அமர்ந்து ரஜினியை அரசியலில் ஈடுபட கேட்டு கோஷம் எழுப்பினார்கள். ரஜினிகாந்த் தான் எடுத்த முடிவில் தெளிவாக இருக்கிறார் என்று அவரது நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தனது ஆன்மிக சிந்தனையில் முழுமையாக கவனம் செலுத்தும் அவர் தினமும் தியானத்தில் ஈடுபடுகிறார். இந்நிலையில் அவர் அமெரிக்க செல்லவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன் ஜக்குபாய் என்ற படத்தில் நடிக்கவிருந்தார். அதன் படப்பிடிப்பில் இருந்த போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. குணம் அடைந்த பின் சென்னை திரும்பினார். பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார். காலா, கபாலி, பேட்ட, தர்பார் போன்ற படங்களில் நடித்தார். அடுத்த அண்ணாத்த படப்பிடிப்பில் நடித்து வருகிறார். தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருக்கிறார். அங்குள்ள மருத்துவமனையில் அவர் தனது உடல்நிலை பரிசோதனை மேற்கொள்வதுடன் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துக் கொண்டதற்கான மேற் பரிசோதனைகள் செய்யவிருக்கிறாராம். அவருடன் குடும்பத்தினர் அனைவரும் செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய பிறகே அண்ணாத்த ஷூட்டிங்கில் பங்கேற்பது எப்போது என்பது பற்றி முடிவு செய்கிறார்.