60 விவசாயிகள் மரணத்திற்கு மத்திய அரசு தான் பொறுப்பு.. பாரதிய கிஷான் சங்கம் குற்றச்சாட்டு..
வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் இது வரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்று பாரதிய கிஷான் சங்கம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.4) 40வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 40 விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட அமைச்சர்கள் நடத்திய பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியுற்றன. கடைசியாக, டிச.30ம் தேதி மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் தெரிந்தது.
எனினும், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது, குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் கொண்டு வருவது ஆகிய கோரிக்கைகளில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இன்று(ஜன.4) மீண்டும் 7வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்நிலையில், காசிப்பூரில் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் பாரதிய கிஷான் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாயத் கூறியதாவது: விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் இது வரை 60 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு மத்திய அரசாங்கம்தான் பொறுப்பு. இந்த உயிரிழப்புகளுக்கு மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும். விவசாயிகள் பிரச்னையை மத்திய அரசு அலட்சியப்படுத்தாமல் விரைவில் சுமுகத் தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும். இவ்வாறு திகாயத் கூறினார்.