விஜய் சேதுபதி மகளுடன் நடித்த படம்.. 12வயது பெண்ணின் தாயாக பிரபல நடிகை..
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை அழகியல் சினிமாக்கள் அங்கீகாரம் பெற தவறுவதே இல்லை. அப்படியொரு மாஸான அங்கீகாரத்தைப் பெற காத்திருக்கிறது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகிழ் எனும் படம். எதார்த்த மனிதர்கள் முதல் எதார்த்தம் மீறிய மனிதர்கள் வரை எல்லோரையும் தனது நடிப்பால் திரையில் பிரதி பலிக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ரெஜினா கசான்ட்ரா ஜோடியாகவும், 12 வயது பெண்ணுக்குத் தாயாகவும் மிக இயல்பாக நடித்துள்ளார். மேலும் முதல்முறையாக விஜய்சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் குறித்து இயக்குநர் கார்த்திக் பேசும்போது, "ரொம்ப லைவ்-ஆன படம் இது. விஜய்சேதுபதி டிரைலரைப் பார்த்துவிட்டு, அவரின் சொந்த அனுபவங்கள் பலவற்றைப் பகிர்ந்து கொண்டார். தன் சொந்த வாழ்வோடு கனெக்ட் செய்யும் விதமாகவும் இந்த டிரைலர் இருப்பதாக சிலாகித்தார். இந்த டிரைலர் என்னை நிறைய பேசவைத்துள்ளது, எல்லாம் இந்தப்படம் செய்த வேலை என்றார். மேலும் "ஒரு ஃபேமலிமேனாக எனக்கு நிறைவா இருக்கு" என்றார். அவரது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நூறு சதவிகிதம் தகுதியான படமாக ரசிகர்களின் பார்வைக்கும் இப்படம் இருக்கும். ரெஜினா கசான்ட்ரா இப்படத்தில் அவரே டப்பிங் பேசியுள்ளார்.
டப்பிங் பேசுவதற்காக அவர் மிகவும் மெனக்கெட்டுள்ளார். முதல் முறையாக தமிழில் டப்பிங் பேசியுள்ளதால் மிகவும் சிரத்தை எடுத்து அழகாகப் பேசியுள்ளார். படத்தின் கதை, ஒரு பெற்றோர் ஒரு குழந்தையை எப்படி வளர்க்கிறார்கள்.. அந்தக்குழந்தையாலும் அந்தக் குழந்தைக்கும் ஒரு பிரச்சனை வரும்போது பெற்றோர் அதை எப்படி கையாள்கிறார்கள் என்பதை மிக அழகாகச் சொல்லியுள்ளோம். இப்படத்தின் டிரைலரைப் பார்த்த அனைவரும் மிகப்பெரிய பாராட்டுக்களைக் கொடுத்து வருகிறார்கள். அது எங்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது" என்றார். இப்படத்தின் இசை அமைப்பாளராக ரேவா என்ற பெண் இசை அமைப்பாளர் தமிழில் அறிமுகம் ஆகிறார். இவர் மராட்டியிலும் மலையாளத்திலும் இசை அமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தின் டிரைலரில் வரும் பாடல் அனைவராலும் திரும்ப திரும்ப கேட்கும் விதத்தில் அமைந்துள்ளது. ஒருமுறை கேட்டாலே பலமுறை மனதில் ஓடும்படி ரேவா மிக கேட்சியான ட்யூனை அமைத்துள்ளார், இதுபோல மேலும் இரண்டு பாடல்கள் இருக்கிறது. ஒளிப்பதிவாளராக சத்யா பணியாற்றி இருக்கிறார். இவர் தமிழில் கழுகு படத்தில் ஒளிப்பதிவு செய்திருந்தார், தற்போது பாலிவுட்டிலும் ஒரு படம் செய்திருக்கிறார். முகிழில் கதைக்கு ஏற்ற கேமராக்கோணங்களை அமைத்துள்ளார். 96 படத்தின் எடிட்டிங் மூலம் மக்களின் மனதில் பதிந்து எடிட்டர் கோவிந்தராஜ் இப்படத்தில் எடிட்டராக பணியாற்றியுள்ளார். இப்படம் விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளது.