திருப்பதி கோவிலில் ஏகாதசி நாட்களில் காணிக்கை ரூ 29.06 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நாட்களில் 4.25 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பத்து நாட்களில் உண்டியல் காணிக்கை 29.06 கோடி ரூபாயாகும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த மாதம் 25ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வழக்கமாக ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரு நாட்கள் மட்டுமே சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு முதல் முறையாக 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு ஆகம முறைப்படி சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு சொர்க்க வாசல் அடைக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக சொர்க்கவாசல் வழியாக வந்து 4 லட்சத்து 25 ஆயிரத்து 596 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக 29.06 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர். இதேபோல் நேர்த்திக் கடனாக 90 ஆயிரத்து 290 பக்தர்கள் மொட்டையடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.