பிரபல நடிகையின் வீட்டில் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபரால் பரபரப்பு
திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல மலையாள நடிகை அஹானா கிருஷ்ணாவின் வீட்டில் இரவில் ஒரு வாலிபர் அத்துமீறி நுழைய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசில் புகார் செய்ததால் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். மலையாள சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் அஹானா கிருஷ்ணா. இவர் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ண குமாரின் மகள் ஆவார். கிருஷ்ண குமார் மலையாளத்தில் காஷ்மீரம் என்ற படத்தில் அறிமுகமானார். இதன்பின்னர் சுக்ருதம், மாந்த்ரீகம், சூப்பர்மேன், புண்ணியம், சத்யமேவ ஜெயதே, சம்மர் பேலஸ், மகாத்மா, சல்யூட் உட்பட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தமிழில் சத்தியம், தில்லாலங்கடி, காவலன், பில்லா 2, தெய்வத் திருமகள், முகமூடி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் அஹானா கிருஷ்ணா பிரபல டைரக்டர் ராஜீவ் ரவி இயக்கிய ஞான் ஸ்டீவ் லோப்பஸ் என்ற படத்தில் அறிமுகமானார். இதன்பின்னர் ஞண்டுகளுடே நாட்டில் ஒரு இடவேளா, லூக்கா, பதினெட்டாம்படி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர்களது வீடு திருவனந்தபுரம் சாஸ்தமங்கலத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் இவரது வீட்டின் கேட் அருகே வந்த ஒரு வாலிபர் கேட்டை திறக்க முயற்சித்தார். அவர் சத்தமாக கேட்டில் அடித்தார். சத்தத்தை கேட்டு நடிகர் கிருஷ்ண குமார் வெளியே வந்து பார்த்தபோது கேட்டைத் திறக்குமாறு அந்த வாலிபர் கூறினார். என்ன காரணம் என்று கேட்டபோது அந்த நபர் எதுவும் கூறவில்லை.
இதனால் சந்தேகமடைந்த கிருஷ்ணகுமார் கேட்டை திறக்கவில்லை. அப்போது திடீரென அந்த நபர் கேட்டைத் தாண்டி உள்ளே குதிக்க முயற்சித்தார். இதில் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணகுமார் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாசில் உல் அக்பர் என தெரியவந்தது. அவர் எதற்காக நடிகை அஹானா கிருஷ்ணாவின் வீட்டுக்குள் நுழைய முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகுமார் சிலகாலமாக பாஜகவுக்கு ஆதரவாக சில கருத்துகளை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.