இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை சந்தேகிப்பவர்கள் புத்தி வளர்ச்சி இல்லாதவர்கள் மத்திய அமைச்சர் கடும் தாக்கு

இந்தியா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை சந்தேகிப்பவர்கள் புத்தி வளர்ச்சி இல்லாதவர்கள் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் ஆகிய இரண்டுக்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து மிக விரைவில் இந்த தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக டாக்டர்கள், நர்சுகள் உட்பட சுகாதாரத் துறையினர், தூய்மை தொழிலாளர்கள், போலீசார் மற்றும் காவல் படையினர் உள்பட 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த தடுப்பூசியில் சந்தேகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி சசிதரூர் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது கட்ட பரிசோதனை நடத்துவதற்கு முன்பே பாரத் பயோடெக்கின் தடுப்பூசியை விநியோகிப்பது பிரச்சினையை ஏற்படுத்தும் என்று சசி தரூர் எம்பி கூறியிருந்தார். பாஜகவின் இந்த தடுப்பூசியை நம்ப முடியாது என்றும், அதை நான் பயன்படுத்த மாட்டேன் என்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார். இவர்களது இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது: இந்தியா தயாரித்துள்ள கொரோனோ தடுப்பூசியை சந்தேகிப்பவர்கள் புத்தி வளர்ச்சி இல்லாதவர்கள். இந்திய விஞ்ஞானிகள் மீதும், இந்தியாவின் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் இதுபோன்ற எந்த முகாந்திரமும் இல்லாமல் குறைகளை கூறுவார்கள். இந்திய விஞ்ஞானிகளின் திறமையால் தான் இந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அவர்களது சாதனையாகும். பிரதமர் மோடியின் இந்த முயற்சியை நம் நாட்டு மக்கள் வரவேற்றுள்ளனர். புத்தியில்லாத சிலர் மட்டுமே இதை ஏற்க மறுக்கின்றனர். குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களுக்கு எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பது தான் வேலையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

More News >>