நாளை கங்குலி டிஸ்ஜார்ஜ்.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்!
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்ட போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை பிடிஐ மற்றும் ஏஎன்ஐ செய்தி நிறுவனங்கள் தான் முதலில் வெளியிட்டன. அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையே , இன்று மருத்துவமனை நிர்வாகம், ``கங்குலி உடல்நிலை சீராக உள்ளது. அடுத்தக்கட்ட ஆஞ்சியோ சிகிச்சையைத் தள்ளி வைப்பது பாதுகாப்பானதாக இருக்கும். இதனை மருத்துவக் குழு ஆலோசித்து முடிவெடுத்துள்ளது. தற்போது கங்குலிக்கு நெஞ்சு வலி இல்லை. இதனால் நாளையோ அல்லது நாளை மறுநாளோ கங்குலி டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார்" எனக் கூறப்பட்டுளள்து.