கேரளாவில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
கேரளாவில் இங்கிலாந்திலிருந்து வந்த 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பீதி பொதுமக்களிடையே இன்னும் குறையாத நிலையில், இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் மேலும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்தியா, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகள் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இந்த புதிய வைரஸ் தற்போது பரவியுள்ள கொரோனா வைரசை விட 70 சதவீதம் வேகத்தில் பரவும் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறை செயலாளர் மேட் ஹான்காக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து கடந்த ஒரு சில வாரங்களில் இந்தியா வந்த 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டனர். அவர்கள் அனைவரும் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து கேரளா வந்த 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இன்று இரவு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா நிருபர்களுக்கு ஒரு அவசரப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: இங்கிலாந்திலிருந்து கேரளா வந்த 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் தலா 2 பேர் கோழிக்கோடு மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களையும், தலா ஒருவர் கோட்டயம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய வகை வைரசால் யாரும் பீதியடைய வேண்டாம். இதையும் எளிதில் குணப்படுத்தி விடலாம். ஆனாலும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். முகக் கவசம் அணிவது, சமூக அகலத்தை கடைபிடிப்பது போன்ற கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த நோய் பாதித்துள்ள 4 மாவட்டங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.