ஃபாஜி (FAU-G) கேம், குடியரசு தினத்தன்று அறிமுகமாகிறது
பப்ஜி (PUBG) என்ற கேம் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சீன செயலிகள் தடை செய்யப்பட்டபோது, பப்ஜி கேமும் தடைக்குள்ளாக்கப்பட்டது. பெங்களூருவை சேர்ந்த என்கோர் கேம்ஸ் என்ற நிறுவனம், நடிகர் அக்சய்குமாரை முன்னிறுத்தி ஃபாஜி என்ற கேமை அறிமுகம் செய்வதாக அறிவித்திருந்தது. Fearless And United: Guards என்ற இந்த கேம் FAU:G என்று சுருக்கமாக அறியப்படுகிறது. பலமுறை இதன் அறிமுக தேதிகள் தள்ளிக்கொண்டே சென்றன. தற்போது இதற்கான பாடல் வெளியாகியுள்ளது. ஜனவரி 26ம் தேதி (இந்திய குடியரசு தினம்) ஃபாஜி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபாஜி கேமுக்கான முன்பதிவு டிசம்பர் மாதமே ஆரம்பித்துவிட்டது.
10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதற்கென முன் பதிவு செய்துள்ளதாக என்கோர் கேம்ஸ் நிறுவனம் கூறுகிறது. தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் மட்டுமே இதற்கான முன்பதிவு நடக்கிறது. ஐபோன் பயனர்கள் ஃபாஜி விளையாட காத்திருக்கவேண்டியுள்ளது. பப்ஜியின் பிரதிபலிப்பாக இது செய்யப்படவில்லையென்று என்கோர் நிறுவனம் கூறினாலும் அறிமுக பாடலில் பாரசூட் மூலம் வீரர்கள் இறங்கும் காட்சி இருப்பதால் பப்ஜியை போன்றே இது வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கூகுள் பிளே ஸ்டோரில், கேமுக்கான தேடுதல் பட்டியலில் pre-register என்ற பொத்தானை அழுத்தி ஃபாஜி (FAU:G) கேமுக்கு முன்பதிவு செய்யலாம்.