தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 7970 பேர்.. பாதிப்பு குறைகிறது..
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே மூன்று லட்சம் பேருக்கு பாதித்திருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று நோய் வேகமாக பரவியது. அக்டோபர் மாதத்திற்கு பிறகு தொற்று பரவல் குறையத் தொடங்கியது. தற்போது மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசு நேற்று(ஜன.4) வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 838 பேரையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 21,550 ஆக உயர்ந்தது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 985 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 1414 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 10 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,166 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7970 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். சென்னை(228பேர்), கோவை(83பேர்), மாவட்டங்களில் மட்டும் நேற்று 50க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதித்திருக்கிறது.
மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. திருவள்ளூர்(41), செங்கல்பட்டு(43), சேலம்(31), திருப்பூர்(38) தவிர மற்ற மாவட்டங்களில் மிகவும் குறைவானவர்களுக்கு பாதித்துள்ளது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 26,456 பேருக்கும், செங்கல்பட்டில் 50,260 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 42,809 பேருக்கும், கோவையில் 52,649 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை மாவட்டங்களில்தான் புதிதாக 30, 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் பத்து, பதினைந்து பேருக்குத்தான் தொற்று பரவி வருகிறது.