கொரோனா நிபந்தனைகளை கடைப்பிடிக்க முடியாவிட்டால் விளையாட வரவேண்டாம் இந்திய கிரிக்கெட் அணிக்கு எச்சரிக்கை
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க முடியாவிட்டால் இந்திய கிரிக்கெட் அணி பிரிஸ்பேனுக்கு விளையாட வரவேண்டாம் என்று குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இதையடுத்து இந்தியா 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மிகக் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இங்கு செல்லும் யாராக இருந்தாலும் 14 நாட்கள் கண்டிப்பாக தனிமையில் இருந்தாக வேண்டும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு விளையாடச் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களும் 14 நாள் தனிமையில் இருந்த பின்னரே விளையாடத் தொடங்கினர். இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி சிட்னியில் ஓட்டலுக்கு சாப்பிட சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்தது. ஓட்டலுக்கு சென்ற ரோகித் சர்மா உள்பட 5 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் இந்திய கேப்டன் விராட் கோஹ்லியும், ஹர்திக் பாண்ட்யாவும் நிபந்தனைகளை மீறி ஓட்டலை விட்டு வெளியே சென்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த மைதானம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ளது. இங்கு செல்லும் அனைவரும் 14 நாள் தனிமையில் இருந்த பின்னரே வெளியே செல்ல முடியும். இதனால் இந்திய வீரர்களும் குயின்ஸ்லாந்து வந்தால் 14 நாட்கள் தனிமையில் இருந்த பின்னரே விளையாட அனுமதிக்க முடியும் என்று குயின்ஸ்லாந்து மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே இந்திய வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமையில் இருந்து விட்டதால் குயின்ஸ்லாந்து வந்த பின்னர் மீண்டும் 14 நாட்கள் தனிமையில் இருக்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. ஆனால் இதற்கு குயின்ஸ்லாந்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், குயின்ஸ்லாந்து வரும் அனைவரும் 14 நாட்கள் கண்டிப்பாக தனிமையில் இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் இந்த நிபந்தனையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதை கடைப்பிடிக்க முடியாவிட்டால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குயின்ஸ்லாந்துக்கு வரத் தேவையில்லை என்று கூறினார்.
இதையடுத்து 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இந்தியா திரும்பி விடலாமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஒரு அமைச்சர் கூறிய சில கருத்துக்கள் இந்திய கிரிக்கெட் அணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவிலுள்ள சட்டங்களை கடைப்பிடிக்க இந்திய அணிக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. கடைசியாக இந்திய அணியுடன் சேர்ந்த ரோகித் சர்மா உள்பட அனைவரும் ஏற்கனவே 14 நாட்கள் தனிமையில் இருந்து விட்டனர். இதன் பின்னரும் குயின்ஸ்லாந்தில் மேலும் 14 நாள் தனிமையில் இருக்குமாறு கூறுவது ஏற்கத்தக்கதல்ல. ஆஸ்திரேலிய அமைச்சரின் கருத்து கண்டிக்கத்தக்கது. இதனால் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியுமா என்பது சந்தேகமே என்று கூறினார்.