கேரளாவில் பறவைக் காய்ச்சல் மாநில பேரிடராக அறிவிப்பு
கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து அங்கு மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வாத்து, கோழி, முட்டைகளை கொண்டு வர தமிழகம் தடை விதித்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வாத்துப் பண்ணைகள் அதிக அளவில் உள்ளன. இங்கிருந்து தான் கேரளா முழுவதும் வாத்துகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த பகுதிகளில் அடிக்கடி பறவைக் காய்ச்சல் பரவுவது உண்டு. கடந்த 2014 மற்றும் 2016ம் ஆண்டுகளில் பறவை காய்ச்சல் பரவியதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான வாத்து, கோழி மற்றும் பறவைகள் கொல்லப்பட்டன.
இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கார்த்திகைப்பள்ளி மற்றும் குட்டநாடு தாலுகா பகுதிகளிலும், கோட்டயம் மாவட்டத்திலுள்ள நீண்டூரிலும் திடீரென வாத்துகள் செத்து விழுந்தன. இது குறித்து அறிந்த கால்நடை பாதுகாப்பு துறை அதிகாரிகள் அங்கு சென்று பரிசோதித்தனர். இறந்த வாத்துகளின் ரத்த மாதிரி எடுத்து போபாலில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் பறவை காய்ச்சல் தான் வாத்துகள் இறந்ததற்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதிகள் உஷார் படுத்தப்பட்டன. அங்கு உள்ள வாத்துகள், கோழிகள், அலங்கார பறவைகள் உள்பட அனைத்து பறவைகளையும் கொல்ல தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான பணிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. இங்குள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகளைக் கொல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து தற்போது மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மற்ற இடங்களுக்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காய்ச்சல் பரவியுள்ள உள்ள ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை இறைச்சி விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியிலிருந்து வேறு எந்த பகுதிக்கும் பறவைகளை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள் உள்பட பறவைகளையும், முட்டைகளையும் கொண்டு வர தமிழகம் தடை விதித்துள்ளது.