கொரோனாவுக்கு அடுத்து பீதி கிளப்பும் பறவைக் காய்ச்சல்.. இமாச்சலில் 1800 பறவைகள் பலி..

இமாச்சலப் பிரதேசத்தில் பறவைக் காய்ச்சலால் 1800 பறவைகள் பலியாகியுள்ளன. மத்தியப் பிரதேசம், கேரளா மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி தற்போதுதான் மீண்டு வருகின்றனர். இப்போது அடுத்ததாக பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. கேரளாவில் கடந்த வாரம் பறவைக் காய்ச்சல் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் போங் டாம் ஏரியைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பறவைகள் மொத்தம், மொத்தமாக இறந்து கிடந்தன. இந்த பறவைகள், ஒரு இடத்தில் இருந்து புலம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு செல்லும் பறவைகள்.

இறந்து கிடந்த 5 பறவைகளின் சடலங்கள் பரிசோதிக்கப்பட்டன. அதில் அந்த பறவைகளுக்கு எச்5என்8 எனப்படும் ஏவியன் ப்ளூ வைரஸ் பாதித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இதே போல், மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்சவுர் பகுதியில் மொத்தமாக காகங்கள் இறந்து கிடந்தன. அவற்றை பரிசோதித்த போது அங்கும் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த மாவட்டத்தில் கோழிக்கறி, முட்டைகள் விற்பனைக்கு 15 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை விற்கும் கடைகள் மூடப்பட்டுள்ளன.

அம்மாநில கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் டாக்டர் ரோக்டே கூறுகையில், ஏழு மாவட்டங்களில் சுமார் 400 காகங்கள் பறவைக் காய்ச்சலால் இறந்துள்ளன. ராஜஸ்தானில் இருந்து இந்த எச்5என்8 வைரஸ் பரவியிருக்கிறது. தற்போது இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார். இதே போல், கேரளாவில் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது. இந்நிலையில், கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்த பிறகுதான் தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றன என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பறவைக் காய்ச்சல் தமிழ்நாட்டுக்குள் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

More News >>