கச்சேரியில் எழுந்து நின்று பாடாததால் ஆத்திரம்: கர்ப்பிணி பாடகி சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் நடந்த கச்சேரி ஒன்றில் கர்ப்பிணியாக இருந்த பாடகி எழுந்து நின்று பாடாததால் ஆத்திரமடைந்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள லர்கானா பகுதியில் கச்சேரி ஒன்று நடைபெற்றது. அப்போது, சமீனா சமோன் (24) என்ற பாடகி கச்சேரியில் பாடிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், கச்சேரியை பார்த்துக் கொண்டிருந்த தரிக் அகமது ஜடோய் என்ற பார்வையாளர்கள் ஒருவர் சமீனா சமோனை எழுந்து நின்று பாடும்படி கூறியுள்ளார். ஆனால், தான் கர்ப்பிணி அதனால் எழுந்து நின்று பாட முடியாது என்று சமீனா சமோன் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தரிக் அகமது தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார். இதில், படுகாயம் அடைந்த சமீனா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கச்சேரி ஒருங்கிணைப்பாளர்கள் சமீனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சமீனாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சமீனாவின் கணவர் போலீசில் புகார் தெரிவித்ததை அடுத்து, வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கச்சேரியில் எழுந்து நின்று பாடவில்லை என்பதற்காக கர்ப்பணி என்றும் பாராமல் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com