சரக்கு வாகன வரிகளை ரத்து செய்ய வேண்டும் : லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள்

கொரோனா ஊரடங்கால் லாரி தொழில் கடுமையாக பாதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் சரக்கு வாகனங்களின் இரு காலாண்டு வரிகளை ரத்து செய்ய வேண்டும் என மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் செல்ல.ராசாமணி நாமக்கல்லில் இன்று செய்தியாளரிடம் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் லாரி தொழில் இதுவரை இல்லாத வகையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 மாத காலமாக லாரிகள் இயக்கப்படாததால் இரு காலாண்டு வரியினை ரத்து செய்ய வேண்டும். தெலுங்கானா அரசு லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அங்கு காலாண்டு வரியை ரத்து செய்துள்ளது. இதேபோல தமிழக அரசும் வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரி வருகிறோம். ஆனால் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. தமிழக மக்கள் கேட்காமலே இந்த அரசு 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கி உள்ளது. இதற்காக சுமார் 6 ஆயிரம் கோடி செலவு செய்ய உள்ளது.

ஆனால் லாரி உரிமையாளர்களின் இரு காலாண்டு வரியை ரத்து செய்தால் அரசுக்கு 1500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என அரசு தெரிவிக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்க கூடிய லாரி உரிமையாளர்களின் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க வேண்டும் என்றால் 12.50 இலட்சம் லாரிகளைன் காலாண்டு வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். காலாண்டு வரிகளை ரத்து செய்யாவிட்டால் அனைத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தினரை திரட்டி விரைவில் போராட்டம் நடத்த வேண்டிவரும். என்றார்.

More News >>